பேச்சு, கருத்தரங்கு நாள் 1, ஷூடி முகாம், யுகே, கருத்தரங்கு நாள் 1. உள்ளாய்வு மற்றும் தியானம்

Shudy Camps Park, Shudy Camps (England)

Feedback
Share
Upload transcript or translation for this talk

இந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்தில் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்க மாட்டோம், ஏனெனில் சில சூழ்நிலைகளும் உள்ளன.

ஆனால், ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு விதமாகவோ, நமது திட்டங்களை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும், அதை நாம் உடனடியாக திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – தெய்வீகம் நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறது. நான் ஒரு சாலையில் செல்கிறேன் என்று வைத்துக் கொண்டால், மக்கள், ”நீங்கள் வழியை தவறவிட்டீர்கள் அன்னையே” என்று கூறுவார்கள். அது பரவாயில்லை. நான் ஒருபோதும் தொலைவதில்லை, ஏனென்றால் நான் என்னுடன் இருக்கிறேன்! ஆனால் நான் அந்த குறிப்பிட்ட சாலையில் செல்ல வேண்டியிருந்தது. அதுதான் விஷயம். நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால்தான் நான் அந்த சாலையில் இருக்கவில்லை, நான் என் வழியை தவறவிட்டேன். அத்தகைய புரிதல் உங்களிடம் இருந்தால், உங்கள் இதயத்தில் அந்த திருப்தி இருந்தால், நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஆண்டு கண்டிப்பாக பொது நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தோம், மேலும் நம்மால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.இதன் காரணம் என்ன? என்று நான் யோசித்தேன்.

எனவே நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும். உயிருள்ள மரமான ஒரு மரத்தின் வளர்ச்சியில், அது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு புள்ளி வரை நகர்கிறது, ஒரு மாற்றம் ஏற்படும் வரை. ஏனென்றால் அந்தப் பக்கம் சூரியன் வராமல் இருக்கலாம், ஒருவேளை நீர் நிலைகள் வராமல் இருக்கலாம், அதனால் அவை மாறத் தொடங்குகின்றன. அதே போல, நாம் இறைவனின் கைகளில் இருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சில திட்டங்கள் மாற்றப்பட்டால், அது நம்மீது மீண்டும் பிரதிபலிக்கிறது என்றால், ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சஹஜ யோகிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. முதலில் உங்களை ஒருங்கிணைக்க, நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்குள் உள்ள ஒளியை பிரதிபலிக்கவும் மற்றும் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ளவும் நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்: சஹஜ யோகாவில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் எங்கே இருந்தீர்கள், எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள் , மேலும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? உங்களிடம் என்ன குறை இருக்கிறது?

நீங்கள் உங்களை நியாயப்படுத்தாமல், மிகவும் பாரபட்சமற்ற முறையில், எந்தவொரு பூதத்தையோ அல்லது உங்களுக்குள் உள்ள எந்த பாதாக்களையோ அல்லது வேறு யாரையும் குறை கூறாமல் உங்களை நீங்களே பார்க்கத் தொடங்கும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களால் சரியாக ஒருங்கிணைக்க முடியாத அளவிற்கு உங்களுக்கு என்ன தவறு நேர்ந்தது என்பதை நீங்களே பார்க்க தொடங்கினால், இன்னும் சிக்கல்கள் உள்ளன அவை சரி செய்யப்பட வேண்டும் என்பதை கண்டு நீங்கள் வியப்படைவீர்கள். இப்போது இந்த பிரச்சினைகளை நீங்கள் மிகவும் தெளிவாகக் காணலாம். ஆத்மாவின் ஒளியில் , “இது எனக்கு தவறாகிவிட்டது” என்பதை நீங்கள் மிகத் தெளிவாகக் காணலாம். நான் கவனித்த மிக சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்று, சஹஜ யோகா எல்லா நேரத்திலும் ஒருவித மாயையால் மூடப்பட்டிருக்கிறது. மற்றும் இந்த மாயா என்பது அறியாமை, சில நேரங்களில் முழுமையான அறியாமை, சில நேரங்களில் பகுதி அறியாமை. இப்போது நீங்கள் சஹஜ யோகத்தில் சேரும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கலாம், உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும், உங்கள் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். உங்கள் உடல்நிலைக்கு ஒருவித ஆசீர்வாதம் கிடைக்கும். மேலும் நிதியை பொறுத்தவரை, உங்களுக்கு வேலை கிடைக்கும், பணம் கிடைக்கும், தனிச்சிறப்புவாய்ந்த ஏதாவது ஒன்று கிடைக்கும், இது உண்மையிலேயே அதிசயமானது.

இப்போது மக்கள் அந்த சாதனைகளில் மிகவும் தொலைந்து போகிறார்கள் “ஓ, இதுதான் இப்போது நமக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்று நினைத்துக்கொண்டு அலையத் தொடங்குவார்கள். இனி நாம் இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை” அதாவது நீங்கள் இதுவரை செய்ததற்குப் போதுமான வெகுமதியைப் பெற்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் . அது அப்படி இல்லை! சஹஜ யோகாவில் உங்கள் நம்பிக்கை முழுமையாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக உங்களுக்கு ஒரு வகையான ஆதரவு வருகிறது. மேலும் குறிப்பாக, நான் யார் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் இன்னும் அலைந்து கொண்டே சென்றால், இந்த ஆசீர்வாதங்களில் சில சாபங்களாக மாறலாம், மேலும் அது எத்தகைய சாபம் நம்மீது விழுந்தது என்றும் அது எப்படி தவறான வழியில் சென்றது என்றும் நீங்கள் உணரலாம். சிலருக்கு, ஆசீர்வாதங்களின் உணர்வைப் பெற, உணர நேரம் எடுக்கும். உதாரணமாக, பெரும்பாலும், நவீன யோசனைகளின்படி, அதிக பணம் பெறுவது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று நாம் நினைக்கிறோம். பலர் பெறவும் செய்கிறார்கள். ஆனால் உண்மையில், அது இல்லை.

உங்களுக்குள் அமைதி பெற, உங்கள் சாட்சி நிலையை அடைய மேலும் உங்கள் நுண்ணதிர்வுகளை நன்றாக உணர, மற்றும் மையத்தில் இருப்பதே, எப்பொழுதும் மேல் நோக்கி செல்வதே உண்மையான ஆசிர்வாதமாகும். ஏனெனில் அதன் மூலம் மற்ற அனைத்தும் கிடைக்கும். முழுமையான மகிழ்ச்சி உங்களுக்குள் கொப்பளிக்கும் போது மட்டுமே நிறைவு சாத்தியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாமே மகிழ்ச்சியை அடைவதற்கும், மகிழ்ச்சியை உணருவதற்கும் ஒரு வழிமுறையாகும். இது முடிவல்ல. அப்படி இருந்தால், பணம் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள், அனைத்து வெற்றிகளையும் பெற்றவர்கள், அவர்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அப்படி இல்லை, அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், மேலும் அவர்கள், ஒரு வகையில், நாளுக்கு நாள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வெறுக்கிறார்கள், அவர்களால் அதை தாங்க முடியாது. அவர்கள் ஏன் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே உங்களுக்கு வரும் இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும், உங்களுக்கு வரும் இந்த மாற்றங்கள் அனைத்தும், உங்களுக்குத் திறக்கும் இந்தப் புதிய செயற்களம் அனைத்தும், ஒருவர் அது தனது நன்மைக்காக என்பதை அறிய வேண்டும், எல்லாம் உங்கள் நன்மைக்கே. மேலும் உங்களது ஆன்மீக ஏற்றமே உங்களுக்கு நன்மை ஆகும். உங்கள் ஆன்மீக உயர்வைத் தவிர வேறில்லை.

மீதமுள்ள அனைத்தும் பயனற்றவை மற்றும் பலனற்றவை. வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதையே ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், அது பலனளிக்கும். ஆனால் சஹஜ யோகாவில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது இரக்கம் மற்றும் அன்பு ஆகும். இது அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை. உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ள நீங்கள் விடப்படுகிறீர்கள். உங்கள் ஆத்மாவே உங்களை வழிநடத்த வேண்டும். எல்லா நேரத்திலும் எந்த ஒரு சீராட்டலோ அல்லது திருத்தமோ நடப்பதில்லை. ஆனால் நீங்களே உங்களைப் புரிந்துகொள்வதும், உங்களைப் பார்த்துக்கொள்வதும், செயல்படுவதும் உங்களிடமே விடப்படுகிறது. ஆனால் “சஹஜ யோகாவிற்கு நான் என்ன செய்துள்ளேன்?” என்ற அளவுகோல் இருக்க வேண்டும்.

இப்போது நான் அன்னைக்கு என்ன செய்துள்ளேன்?” இந்த இரண்டு விஷயங்களையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். சஹஜ யோகத்திற்காக நான் செய்யக்கூடிய சிறு காரியமும்கூட முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் புத்திசாலியாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம் கடவுளுக்காக வேலை செய்வதே என்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவரை மனிதர்கள் ஈடுபட்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான், மனிதர்கள் இதுவரை ஈடுபடாத மிக உயர்ந்த வகை நிறுவனங்களில் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்பு. மேலும் என்ன ஒரு வாய்ப்பு! “அன்னையே நாங்கள் சாதாரணமானவர்கள், நாங்கள் நல்லவர்கள் அல்ல, நாங்கள் பயனற்றவர்கள்” என்று நீங்கள் கூறலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனவே உங்களைப் பற்றி ஏதாவது இருக்க வேண்டும். கடவுளின் இந்த மகத்தான வேலையைச் செய்யப்போகும் அந்த பகுதியை உங்களுக்குள் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே நீங்கள் அது எது என்று தேடி கண்டறிய வேண்டும்: “சஹஜ யோகாவிற்கு நான் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டேன்? சஹஜ யோகாவில் நான் என்ன செய்ய முடியும்?

சஹஜ யோகாவில் நான் என்ன செயல்படுத்த முடியும்? இது உங்களுக்கு ஒரு நிலையான நினைவூட்டலாக இருக்க வேண்டும், “சஹஜ யோகாவுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் சஹஜ யோகாவை முழுமையாக சாதகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஒருவரிடம் பணம் இல்லை என்று வைத்துக்கொள்வோம், சஹஜ யோகா பணம் கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார், வேலை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும், அதை கொடுக்க வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டும், எல்லாமே. எதிர்பார்ப்புகள் எல்லாம் சரிதான். ஆனால் “சஹஜ யோகாவிற்கு நான் என்ன செய்தேன்?” இது தன்னாய்வின் மற்றொரு புள்ளி. சஹஜ யோகத்திற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம். இது பணம் அல்ல, வேலை இல்லை, சிந்தனை இல்லை, எந்த வகையான ஆதரவும் இல்லை. ஆனால் அதில் முக்கியமான ஒன்று, நீங்கள் எத்தனை பேருக்கு ஆத்ம விழிப்புணர்வு கொடுத்திருக்கிறீர்கள்?

நீங்கள் கணக்கிட வேண்டும். உங்களால் எத்தனை பேருக்கு ஆத்ம விழிப்புணர்வு கொடுக்க முடிந்தது, சஹஜ யோகாவைப் பற்றி எத்தனை பேரிடம் பேசி இருக்கிறீர்கள். நீங்கள் சிலருக்கு ஆத்ம விழிப்புணர்வு கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கலாம், அவர்கள் வருகிறார்கள், அவர்கள் பின்வாங்குகிறார்கள் – பரவாயில்லை. அவர்கள் கடைசி முடிவாக உங்களிடம் வருவார்கள். இன்று நீங்கள் சிலபேரிடம் முயற்சிக்கிறீர்கள், அவர்கள் தொலைந்து போவார்கள். மீண்டும் நாளை, அதற்காக அயராது உழைக்க வேண்டும். நான் இங்கிலாந்தில் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் இங்கிலாந்துக்கு வருவது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. இதயம் நன்றாக வேலை செய்ய, நான் இங்கு வர வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இதயம் சோம்பலாக உள்ளது, அது உங்களுக்குத் தெரியும், மேலும் மந்தமான இதயம் எல்லா வகையான பிரச்சனைகளையும் பெறுகிறது.

ஆனால் இத்தனை ஆண்டுகளாக நான் வேலை செய்து வருகிறேன், ஒவ்வொரு ஆண்டும், சஹஜ யோகிகளுக்காக நான் எவ்வளவு நேரம் கொடுக்க முடியுமோ, அவர்களின் பிரச்சனைகளுக்காக, சஹஜ யோகாவிற்காக, அவர்களின் மிகச்சிறிய பிரச்சனைக்காக, அவர்களுக்கு தேவையான எந்த உதவிக்கும், ஒவ்வொரு வகையிலும், நான் அதைச் செய்ய முயற்சித்தேன். நேரடியாகவும், மறைமுகமாகவும், நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்னும், இப்போது யோகிகளாக இருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் முனிவர்கள். என்னிடம் இருக்கும் ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும், மிகவும் சுவாரஸ்யமான புகைப்படம், நீங்கள் அனைவரும் சான்றளிக்கப்பட்ட முனிவர்கள்! அந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? இதுவரை இல்லை? நீங்கள் அதைப் பார்ப்பது நல்லது, அதைப் பெறலாம்! புகைப்படம் எனது பெட்டியில் உள்ளது என்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் சான்றளிக்கப்பட்ட முனிவர்கள்!

இது தெய்வீகத்தால் நிகழ்ந்தது, எந்த ஒரு முக்கியமானவராலயோ அல்லது எந்த ஒரு போப்பாலும் அல்ல. எனவே, இந்த முனிவர்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள்? உங்களுக்குத் தெரியுமா, போப்பால் சான்றளிக்கப்பட்ட ஒரு புனிதர், செயற்கையாக சான்றளிக்க பெற்றதையே ஒரு பெரிய விஷயம் என்றால் எல்லாம் வல்ல இறைவனால் சான்றளிக்கப்பட்ட உங்களைப் பற்றி என்ன சொல்வது? நீங்கள் இன்னும் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறீர்கள், உங்களின் சிறு, சிறு விஷயங்களில் நீங்கள் இன்னும் மும்முரமாக இருக்கிறீர்கள், உங்களின் சிறிய வாழ்க்கை மற்றும் சிறிய குடும்பங்களில் நீங்கள் இன்னும் மும்முரமாக இருக்கிறீர்கள். ஒரு துறவியைப் பொறுத்தவரை, சமஸ்கிருதத்தில் ‘உதார சரித்தானாம் வசுதைவ குடும்பகம்’ என்று கூறப்படுகிறது, ஒரு தாராள குணம் கொண்ட ஒரு நபருக்கு, ஒரு துறவிக்கு, உலகம் முழுவதும் அவரது சொந்த குடும்பம் ஆகும். நீங்கள் இன்னும் உங்கள் சொந்த குடும்பத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களின் புனிதத்தன்மையை நீங்கள் இன்னும் அறியவில்லை. ஒரு துறவி தனது மனைவியைப் பற்றி, தனது சொந்த குழந்தையைப் பற்றி, தனது சொந்த வீட்டைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை, அவர் உலகம் முழுவதையும் பற்றி கவலைப்படுவார். இப்போது, சஹஜ யோகிகளாகிய நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் . நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்.

உலகம் முழுவதிலும் நமக்கு பிரச்சினைகள் உள்ளன. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சிறந்த அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் ஒருவித அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும், அல்லது ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் இந்த உலகத்தை தொந்தரவு செய்யும் பிரச்சனைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒரு முனிவராக இருந்து கொண்டு உங்கள் சொந்த உலகில் வாழ முடியாது, “இப்போது நான் நிரானந்தத்தில் இருக்கிறேன்!” என்று அது சாத்தியமில்லை. நீங்கள் நிரானந்தத்தில் மட்டும் இருக்க முடியாது. நீங்கள் இந்த உலகில் வாழ வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த உலகின் அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். “அன்னை நான் இதை எப்படிச் செய்ய முடியும், அதை எப்படிச் செய்ய முடியும்?”

என்று உங்கள் பிரச்சினைகளை மட்டுமல்ல, உலகின் அனைத்து பிரச்சினைகளைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் நீங்கள் உலகம் முழுவதையும் பற்றி கவலைப்பட வேண்டும். உலகில் என்ன நடக்கிறது, உலகின் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. அதுமட்டுமல்ல, நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளில், “அன்னை இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வையுங்கள்” என்று சொல்ல வேண்டும். கூட்டாக, தனித்தனியாக, உங்கள் கவனத்தை உங்களிடமிருந்து, உங்கள் சிறிய வாழ்க்கையிலிருந்து, நீங்கள் மிகவும் பரந்த விஷயத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் – அப்போதுதான் நீங்கள் ஒரு துறவி ஆவீர்கள். மேலும் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று தெய்வீக உதவி கேட்பது உங்கள் கடமை என்று நீங்கள் நினைக்க வேண்டும். இந்த வேலைக்காகத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். நீங்கள் கேட்பது பலனளிக்கும், ஏனென்றால் நான் ஆசையற்றவள் என்பது உங்களுக்கு தெரியும்.

நீங்கள் அதற்கு ஆசைப்பட வேண்டும். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அது நிறைவேறும். அன்னையின் பாதுகாப்பு, பாசம், கருணை உங்களிடம் உள்ளது. ஆனால் நீங்கள் இந்த உலகத்தைக் கவனித்து கொள்ள வேண்டும் மேலும் உங்களிடம் உள்ள அக்கறையைக் காட்ட வேண்டும், மிகவும் வரையறுக்கப்பட்ட பகுதிகளுடனும், மிகவும் வரையறுக்கப்பட்ட வழிகளுடனும் வாழக்கூடாது. இப்போது ஆங்கிலேயர்கள் நினைப்பது போல், ஆங்கிலேயர்கள் இங்கே இருக்கிறார்கள், சரியா. “இங்கிலாந்து பிரச்சனைகள் எங்கள் பிரச்சனைகள்.” இல்லை. சஹஜ யோகம் உள்ள எல்லா இடங்களிலும் உங்கள் பிரச்சனைகள் விரியும். மேலும் அவர்கள் அனைவைரையும் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும். இப்போது நாம் ஆஸ்திரேலியாவில் பிரச்சனைகள் என்று வைத்து கொள்வோம்.

மற்றும் அங்கே ஒருவர் மிகவும் தொந்தரவு கொடுப்பவராக இருக்கிறார். எனவே, நீங்கள் அந்த நபரை காலணிகளால் அடித்து அது சரியாக போவதை நீங்கள் பார்க்க வேண்டும். யாரை காலணியால் அடிக்க வேண்டும் என்று உங்கள் தலைவர் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் சரி, அமெரிக்காவில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரி, எங்கேயாவது சஹஜ யோகாவில் பிரச்சனை இருந்தால், சஹஜ யோகா மீது தாக்குதல் இருந்தால், நீங்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். பிறகு நீங்கள் பார்ப்பது போல் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. நீங்கள் பார்க்கிறீர்கள், அமெரிக்கா இப்போது முட்டாள்தனமாக மாறுவதை நாம் காண்கிறோம், அல்லது நீங்கள் என்ன சொன்னாலும், நீங்கள் அமெரிக்காவை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் கவனத்தை வெளியே நீட்டிக்க வேண்டும், உள்ளே இல்லை உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் வீட்டைப் பற்றி, உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். உங்கள் கவனத்தை வெளியில் பரப்பியவுடன், உங்கள் வீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன, சிறிய வட்டத்தில் அவை தீர்க்கப்படுகின்றன. நீங்கள் வெளியில் கவனம் செலுத்த வேண்டும்! இந்த நாட்களில் தொலைக்காட்சிகள் உள்ளன, முதலில், “தொலைக்காட்சிகள் எதையும் பார்க்க வேண்டாம்!” என்று நாம் கூறியிருந்தோம், ஏனெனில் சஹஜ யோகிகளுக்கு தொலைக்காட்சி பார்த்து எந்த பயனும் இல்லை.

தொலைகாட்சியைப் பார்த்ததும் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் . ஆனால் இப்போது நீங்களே பார்க்கக்கூடிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்கள் அதை நுட்பமாய் ஆராயலாம், உலக பிரச்சனைகள் என்ன உள்ளன , உங்கள் கவனத்தை எங்கு செலுத்த வேண்டும் என்பதை நீங்களே பார்க்கலாம். உங்கள் ஆளுமையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், இது ஒரு மிகச்சிறிய பகுதியில் முழுமையாக ஈடுபடக்கூடிய ஒரு ஆளுமை அல்ல. உங்கள் ஆளுமை, பிரபஞ்சத்தின் அனைத்து பிரச்சனைகளிலும், அங்குள்ள அனைத்து பிரச்சனைகளிலும் ஈடுபட வேண்டும். எல்லாமே மிகவும் கூட்டு வழியில் செயல்பட முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த கட்டத்தில், இப்போது நீங்களே பார்க்கலாம், அனைத்து சஹஜ யோகிகளும் தங்கள் தலையின் மேல் நுண்ணதிர்வுகளைப் பெற்றுள்ளனர். நீங்கள் அனைவரும் பார்க்க விரும்புகிறீர்களா? அனைவரும் பாருங்கள்! கணபதிபுலேயில் அமர்ந்திருக்கிறீர்கள்.

எனவே உங்கள் நுண்ணதிர்வுகளை விரிவு படுத்துங்கள். உங்கள் கவனத்தை விரிவு படுத்துங்கள். உங்களுக்கு இருக்கும் மற்ற முட்டாள்தனமான பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிடுவது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இப்போது பாருங்கள். குழந்தைகள் முதலில் பார்க்கட்டும். பாருங்கள். உங்கள் அனைவருக்கும் தலைக்கு மேல் நுண்ணதிர்வுகள் இருக்கிறது. தயவு செய்து, அழுகிற குழந்தையை தூக்குங்கள். என்ன விஷயம்? அவள் சோர்வாக இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன்.

சரி, அமருங்கள். உட்காருங்கள், உட்காருங்கள், வாருங்கள், உட்காருங்கள். நிற்க. ஹலோ, ஸ்துனியா? தயவுசெய்து உங்கள் முகத்தை இந்தப் பக்கம் வைக்கவும். ஹலோ? உட்காருங்கள். இப்போது, நீங்கள் அனைவரும் உட்காருங்கள், புத்திசாலித்தனமாக இருங்கள். ஆ! அவர்கள் வளரட்டும், நான் உங்களுக்கு சொல்கிறேன், அவர்கள் வளர நான் காத்திருக்கிறேன்!

எனவே ,நாம் துறவிகள் என்பதை அறிய, நம்மை நோக்கிய மனப்பான்மை நமது பெருமை, நமது சொந்த நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம், மேலும் இப்போது, நாம் ஒளியாகிவிட்டோம், மற்றும் நாம் மற்றவர்களுக்கு ஒளி கொடுக்க வேண்டும். நீங்கள் பார்த்தால், பைபிளில், கிறிஸ்து கூறியிருக்கிறார், இது மிகவும் முக்கியமானது, நீங்கள் மேசையின் கீழ் விளக்கை வைக்க கூடாது. இது அது தான். நீங்கள் ஒரு பீடத்தில் விளக்கை வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்க, மிக உயர்ந்த இடத்தில், கோட்டையின் மீது உங்கள் ஒளியை வைக்க வேண்டும் என்பதும் இதுதான். மேலும் இது இரு வழிகளிலும் செயல்படுகிறது நீங்கள் என்னவென்று புரிந்து கொள்ள ஆரம்பித்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன, உங்கள் நிலைமை என்ன, உங்கள் சக்தி என்ன, சஹஜ யோகாவில் நீங்கள் என்ன சாதித்தீர்கள், சஹஜ யோகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பொறுப்பு என்ன, மற்றும் சஹஜ யோகாவிற்கு நீங்கள் என்ன கொடுக்க வேண்டும். சஹஜ யோகம் உங்களை எப்படி இவ்வளவு திறமையாக்கியது, நல்லவராக்கியது, இனிமையானவராகியது. நீங்கள் போதுமான அளவு நன்னடத்தையுடையவரா? நீங்கள் சரியாக நடந்து கொள்கிறீர்களா?

தேவையான அனைத்து சரியான விஷயங்களையும் செய்கிறீர்களா? ஏனென்றால் அதை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆற்றல்கள் மற்றும் ஆன்மீக வாழ்க்கையுடன் சிறப்பு தொடர்புகள் கொண்டவர்கள், நீங்கள் மற்ற எல்லா சாதாரணமான, முட்டாள்தனமான மனிதர்களைப் போல நடந்து கொள்ள ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் குடும்பம், உங்கள் குழந்தைகள், உங்கள் முட்டாள்தனமான முந்தைய வாழ்க்கை என்று மட்டுப்படுத்திக் கொண்டால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். நீங்கள் உங்களுக்கே தொலைந்துவிடுவீர்கள். மற்றும் மற்றவர்களுக்கும் தொலைந்துவிடுவீர்கள். உங்களுக்குத் தெரிந்ததை விட பிரச்சினைகள் அதிகம் உள்ளன. அன்னை எங்களை யோகிகளாக ஆக்கியுள்ளார் என்ற புரிதலைத்தான் நீங்கள் அடைய வேண்டும். நாம் துறவிகள். மேலும் நாம் சரியான பாதையை உலகிற்கு காட்ட வேண்டும். அன்னை, நாம் தான் ஒளி என்று சொல்லியிருக்கிறார் மேலும் நாம் எந்த வழியில் செல்ல வேண்டும், எப்படி மேற்கொண்டு செல்ல வேண்டும் என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும்.

அதற்குப் பதிலாக எல்லோரும் ஒரு பிரச்சனையாகத் தெரிகிறார்கள், மிகச் சிறிய சிறிய சுழலில் இருப்பதாகத் தெரிகிறது, சுற்றி சுற்றி செல்கிறது. அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்? இந்த போலி குருக்களைப் பாருங்கள் என்று நான் உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு நுண்ணதிர்வுகள் இல்லை, குண்டலினி பற்றி எதுவும் தெரியாது, சஹஜ யோகா பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் எவ்வளவு செய்கிறார்கள்! அதே நேரத்தில் நாம் என்ன செய்கிறோம்? நாம் இன்னும் நம்முடனும் மற்றும் நமது பிரச்சினைகளுடனும் நமது சொந்த யோசனைகளுடனும், நமது மிகச் சிறிய மனப்பான்மை மற்றும் கோழைத்தனத்துடனும் போராடுகிறோம். இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றி நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களின் சொந்த ஆசை, சொந்த பெரிய மனப்பான்மை, உங்களின் பெருந்தன்மை முன்வர வேண்டும்.

நீங்கள் என்ன திறன் கொண்டவர், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பாருங்கள். மக்களுக்கு இது சொல்வது மிகவும் எளிதானது, “ஓ அன்னையே , இது மிகவும் அதிகம். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.” அல்லது வேறு யாராவது, ” அன்னையே, நான் என் குடும்பத்துடன் பரபரப்பாக இருக்கிறேன்” என்று சொல்லலாம். அல்லது “நான் என் குழந்தைகளுடன் பரபரப்பாக இருக்கிறேன்” என்று யாராவது கூறலாம். அதற்காகத்தான் சஹஜ யோகாவிற்கு வந்திருக்கிறீர்களா? நான் அதற்காகத்தான் உங்களுக்கு ஆத்ம விழிப்புணர்வு அளித்தேனா? இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் அதற்காகத்தான் உங்களுக்கு வந்ததா? எனவே நீங்கள் செய்ய வேண்டிய ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. அதனால்தான் எங்களால் எந்த பொது நிகழ்ச்சிகளையும் நடத்த முடியவில்லை என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம், ஏனெனில் நமக்கு உண்மையில் இங்கிலாந்தில் ஒருங்கிணைப்பு தேவை.

நான் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்தாலும், மக்கள் என்னை இங்கு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் நான் இங்கே தங்கி இருப்பதால், விமான நிலையத்திற்குச் சென்றால் முடிந்தது என்று நினைக்கிறார்கள்! நாங்கள் ஹஜ் முடித்துவிட்டோம். “நாங்கள் விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறோம்; நாங்கள் அன்னையைப் பார்த்தோம், முடிந்தது!” என்னைக் கண்டு என்ன பயன்? நான் உங்களுக்கு என்ன கொடுத்தேன்? உங்களின் ஒளி பரவுகிறதா? உங்களிடமிருந்து எத்தனை பேர் ஆத்ம விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்? உங்களிடமிருந்து எத்தனை பேர் சஹஜ யோகாவைக் கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்? அல்லது உங்கள் வாழ்க்கையிலிருந்து, அல்லது உங்கள் ஞானத்திலிருந்து, அல்லது உங்கள் நடத்தையிலிருந்து?

அதுதான் வழி, அதுதான் அளவுகோல். “சரி, நான் அன்னையின் பயணத்திற்குப் பணம் அனுப்பியிருக்கிறேன்” என்பது இல்லை. அது போதாது. என் வயதில், இந்தியாவில் இருந்து, எந்த பெண்மணியையும் பார்த்தால், அவர்கள் ஒரு தடியுடன் நடக்கிறார்கள், அவர்களால் ஒரு படி கூட ஏற முடியாது. இந்தியப் பெண்களால் முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் வெப்பத்தினால். ஆனால் நான் பயணிக்கிறேன், நான் எப்படி பயணிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும், நான் எவ்வளவு செய்கிறேன். என் குடும்பம் என்னாவது? நான் அவர்களை என் தொடர்பிலிருந்து விலக்கி இருக்கிறேன், என் கணவரை என் தொடர்பிலிருந்து விலக்கி இருக்கிறேன், எல்லோரும் நான் இல்லாமல் இருக்கிறார்கள். நான் தினமும் பயணம் செய்கிறேன், அது உங்களுக்கு நன்றாகத் தெரியும், நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சில நேரங்களில் நான் இரண்டு மணிக்கு தூங்குவேன், சில நேரங்களில் மூன்று மணிக்கு.

இந்த முறை ஹர்ஷ் என்னுடன் இருந்தான், நான் அவனைப் பார்த்தேன், மிகவும் களைத்திருந்தான்! எனவே, நீங்கள் தொடர் ஓட்டம் மட்டுமே செய்கிறீர்கள் என்று நான் கூறினேன். நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், சரி, ஆஸ்திரேலியர்கள் வேலை செய்கிறார்கள். பின்னர் நான் ஆஸ்திரியாவில் இருக்கிறேன், ஆஸ்திரியர்கள் வேலை செய்கிறார்கள், பின்னர் அவர்களுக்கு அங்கு ஒரு இனிய நேரம் கிடைக்கிறது! நான் இங்கிலாந்தில் இருக்கிறேன், சரி, இங்கிலாந்தில் கொஞ்சம், கொஞ்சம் வேலை முடிந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் நன்றாக உட்கார்ந்து, மகிழ்ச்சியுறுவார்கள். என்னைப் பற்றி என்னாவது? நான் ஒரு மாரத்தான் விளையாடுகிறேன்! அதே வழியில் நீங்கள் உணர வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, அதில் எனக்கு என்ன லாபம்? இதனால் எனக்கு என்ன லாபம்?

நான் ஆதாயம் பெறுகிறேன்: நான் எனது குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளேன், நான் அவர்களை கடவுளின் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் சென்றேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும். நீங்கள் அவர்களை கடவுளின் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால், நீங்களே உங்கள் சொந்த மாயையில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் தினமும் கீழே போய் கொண்டே இருப்பீர்கள். நான் கத்தலாம், நான் எதையாவது சொல்லலாம், அது உங்கள் தலைக்குள் போகாது, அது உங்களுக்கு ஒருபோதும் சரி வராது. நீங்கள் எங்கிருந்தாலும் சிக்கித் தவிப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் பார்க்க விரும்பவில்லை. அதற்கு, உங்களுக்கு ஒரு நன்மை உண்டு என்று நான் கூறுவேன், குறிப்பாக இங்கிலாந்தில். நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள். உங்களுக்கு புத்திசாலித்தனம் உள்ளது, சந்தேகமில்லை, நீங்கள் அமெரிக்கர்களைப் போல் முட்டாள்கள் அல்ல. நீங்கள் புத்திசாலிகள்.

இந்த புத்திசாலித்தனம் ஒரு காலத்தில் தந்திரமாக மாறியது, இப்போது நீங்கள் உங்கள் தந்திரத்தினால் சோர்வடைகிறீர்கள். உங்களிடமிருந்து இந்தியர்கள் தந்திரத்தைக் கற்றுக்கொண்டார்கள், அவர்கள் உண்மையில் மிகவும் தந்திரமாகிவிட்டனர். ஆனால் உங்கள் தந்திரத்தால் நீங்கள் சோர்வடைகிறீர்கள், அதனால் இப்போது நீங்கள் சோர்வாகவும், அலுப்பாகவும், களைப்பாகவும், மந்தமாகவும் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் புத்திசாலித்தனத்தால் இது எங்கள் அன்னை செய்யும் முக்கியமான வேலை என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்! நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நீங்கள் சொல்லும் அனைத்தும், நீங்கள் நடந்து கொள்ளும் ஒவ்வொரு விதத்திலும், எல்லாம் வரலாற்றில் இடம் பெறப் போகிறது! நீங்கள் எத்தனை குழந்தைகளை பெற்றீர்கள் அல்லது உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி இருக்கிறார்கள் என்பதல்ல, ஆனால் சஹஜ யோகாவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். சஹஜ யோகத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களோ, என்னவெல்லாம் சாதித்தீர்களோ அவை அனைத்தையும் வரலாறு பதிவு செய்யப் போகிறது. இது வெளியில் பெருமைக்காட்டிக்கொள்ளுவது இல்லை.

இது வெறும் செயல்முறை விளக்கம் அல்ல. இது பெரிய அளவில் பேசுவது அல்ல. அது அப்படி ஒன்றும் இல்லை. உண்மையில், நீங்கள் மொத்தமாக என்ன சாதித்தீர்கள் என்பது பதிவு செய்யப்படும். குறைந்த பட்சம் கடவுள் பாசாங்குத்தனம் மற்றும் டம்பமான மனோபாவங்களை அறிவார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், நீங்கள் எதுவரைக்கும் இருக்கிறீர்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். நீங்கள் கடவுளை ஏமாற்ற முடியாது என்ற ஒரு விஷயத்தை நீங்கள் உணர வேண்டும். ஆனால் நீங்கள் கடவுளை ஏமாற்றும்போது, உங்கள் சுயத்தை, உங்கள் ஆத்மாவை, உங்கள் ஆத்ம விழிப்புணர்வை, உங்கள் சொந்த ஆன்மீக ஏற்றத்தை ஏமாற்றுகிறீர்கள்! எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தாயாக, உங்களை மிகவும் கவனமாக தன்னாய்வு செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று நான் கூறுவேன்: சஹஜ யோகத்திற்காக நாம் என்ன செய்துள்ளோம்?

அலைந்து திரியும் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம்? மற்ற சஹஜயோகிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு அமைதியையும் அன்பையும் இரக்கத்தையும் கொடுத்திருக்கிறோம்? நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு புரிதலையும் சகிப்புத்தன்மையையும் காட்டியிருக்கிறோம்? யாருக்காவது இங்கு கொஞ்சம் கூடுதல் பணம் வந்தால், அவர் மிகவும் டம்பமாகவும், ஆக்ரோஷமாகவும், முரட்டுத்தனமாகவும் மாறுகிறார். என்னால் அதை நம்ப முடியவில்லை! பணம் எப்படி உங்களை இந்த தீமைகளில் இழுக்க முடியும்? நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, கங்கை நதியால் கால்களை கழுவப்பட்ட மகான்கள். எல்லா புனிதர்களுக்கும் மேலான உங்கள் மகிமையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சொந்த சக்திகள், துறவிகள், சஹஜ யோகிகள் போன்ற உங்கள் சொந்த நிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஏனென்றால் ஆத்ம விழிப்புணர்வு எவ்வாறு வழங்குவது என்று உங்களுக்குத் தெரியும், குண்டலினி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும், விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்? இல்லையெனில், மதிப்பு என்னவென்று தெரியாத சில முட்டாள்களுக்கு நான் இந்த அறிவை வழங்கியதாக நினைக்கத் தொடங்குவேன். கிறிஸ்து கூறியது போல், “பன்றிகளுக்கு முன் முத்துக்களை வீசாதே.” ஆனால் அந்த தவறை செய்ததாக நான் நினைக்கவில்லை. பன்றிகளுக்கு முன்னால் முத்துக்களை வீசிய அந்தத் தவறை நான் செய்துவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அதை செய்யவில்லை. ஆனால், நீங்கள் எங்கு நிற்கிறீர்கள், எந்த வகையில் நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். மிகவும் ஆபத்தான நேரத்தை நாம் கடந்து செல்கிறோம் என்பது தெளிவாக உள்ளது. நாம் அதை எதிர்த்துப் போராடுவது மிகவும் முக்கியம்.

நீங்கள் நடத்திய போர்களை விட இது பெரிய அளவானது. இது மனிதர்கள் சந்தித்த எந்தப் போராட்டத்தையும் விடவும் மிகவும் அதிகம். இங்கு ஒரு பயங்கரமான உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது, மற்றும் நாம் அதை மாற்ற வேண்டும். இது ஒரு மகத்தான பணி. அதற்கு நீங்கள் மிகவும் நேர்மையான மற்றும் உள்ளார்ந்த முறையில் உழைக்க வேண்டும். இந்த உலக வரலாற்றில் சஹஜ யோகிகளின் பெயர்கள் தங்க எழுத்துக்களால் எழுதப்படும் நாள் ஒன்று வரும் என்று நான் நம்புகிறேன். இது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது நடக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதை நீங்கள் அனைவரும் கூட்டாக, ஒரே மனதுடன், ஒரே இதயத்துடன் அடைய வேண்டும். நான் என்ன தியாகம் செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?

நான் எப்படி உதவி செய்ய வேண்டும்? எனது பங்களிப்பு என்ன? அந்த நாட்களை என் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.